பண்டத்தரிப்பு அமைவிடம்

பண்டத்தரிப்பு என்பது யாழ்ப்பாண நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். பண்டத்தரிப்பு நகரசபையானது அதனையண்டிய சிற்றூர்களை உள்ளடக்கியது. அவையாவன: சில்லாலை, வடலியடைப்பு, காடாப்புலம், பனிப்புலம் மற்றும் பிரான்பற்று (பிராம்பத்தை) என்பனவாகும்.

“பண்டத்தரிப்பு” என்ற பெயர் அமைந்ததற்கான காரணம் சரியாக யாருக்கும் தெரியாவிட்டாலும், வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருசிலர் இது ஒரு காலத்தில் பண்டங்களை தரித்துவைக்கும் (storage) தளமாக இருந்திருக்கலாம் என்பர். வேறு சிலர் இது பாண்டியர் படையெடுப்பின்போது அதன் படைகள் தரித்துச்செல்லும் இடமாக சிலகாலம் இருந்ததால் முன்னர் “பாண்டியன் தரிப்பு” என்று அழைக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பாக மருவியதாகவும் கூறுவர்.